திருச்சியில் ரேஷன் அரிசி பதுக்கியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சி அரியமங்கலத்தில் ரேஷன் அரிசி பதுக்கியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;
தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு இயக்குனர் ஆபாஷ்குமார் உத்தரவின்படியும், கண்காணிப்பாளர் பாஸ்கரன் அறிவுரைப்படியும், திருச்சி உட்கோட்ட டி.எஸ்.பி. சுதர்சன் தலைமையில் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் அதிகாரிகள் திருச்சி அரியமங்கலம் சிவகாமி அம்மையார் தெருவில் உள்ள ஒரு குடோனில் கடந்த 10ஆம் தேதி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 7960 கிலோ ரேஷன் அரிசி மற்றும் நூறு கிலோ ரேஷன் கோதுமை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்து வெளியில் கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக இதனை அன்வர் பாட்சா என்பவரை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இவர் வெளியில் வந்தாலும் மீண்டும் ரேஷன் அரிசி கடத்தல் குற்றத்தில் ஈடுபடுவார் என்பதால் அவரை கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு வருடம் எந்தவித விசாரணையுமின்றி சிறையில் அடைக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இந்த உத்தரவின் நகல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்வர் பாஷாவிடம் வழங்கப்பட்டது.