திருச்சியில் குட்கா விற்பனை செய்த டீ கடைக்கு கமிஷனர் முன்னிலையில் சீல் வைப்பு
திருச்சியில் குட்கா விற்பனை செய்த டீ கடைக்கு மாநகர போலீஸ் கமிஷனர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
தமிழகத்தில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. போதை பொருட்களால் இளைஞர்களின் வாழ்க்கை தடம் மாறி போவதை தடுப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் படி போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவில் இருந்து போதை பொருட்கள் கடத்தி கொண்டு வரப்பட்டு பெட்டிக்கடைகள் மற்றும் மளிகை கடைகளில் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருச்சி காந்தி மார்க்கெட் அருகே செயல்படும் டீ கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி தலைமையிலான போலீசார் இன்று அந்த கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு சுமார் ஒன்றரை கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதனையடுத்து காவல் துறை ஆணையர் காமினி முன்னிலையில் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு அந்த கடைக்கு சீல் வைத்தார். அதே போல பாலக்கரை பகுதியில் செயல்பட்ட கடையிலும், சத்திரம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்ட கடையிலும் குட்கா பொருள் விற்பனை செய்ததால் அந்த கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.