திருச்சியில் வருகிற 21ம் தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

திருச்சியில் வருகிற 21ம் தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-06-13 11:39 GMT
திருநங்கைகள் (கோப்பு படம்)

திருச்சியில் வருகிற 21ம்தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

அரசாணை (நிலை) எண்.38, சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, நாள்: 15.04.2008ன் படி திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பையும், சமூக அங்கீகாரத்தை அளித்து, அவர்களையும் சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ளும் பொருட்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசின் மூலம் ‘தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம்” 2008-ல் அமைக்கப்பட்டது. அதன்படி திருநங்கைகளின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களாக திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுயதொழில் துவங்க மானிய தொகை, கல்வி உதவி தொகை, சுய உதவி குழு பயிற்சி மற்றும் மானியத் தொகை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ஆதார் திருத்தம், ஆயுஷ்மான் பாரத் அட்டை, இலவச தையல் இயந்திரங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

திருநங்கைகள் நல வாரியம் மற்றும் திருநங்கைகளுக்காக செயல்படும் தொண்டு நிறுவனங்கள் மூலம் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் வருகின்ற 21.06.2024 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே சிறப்பு முகாமில் மேற்கண்ட நலத்திட்டங்கள் குறித்து அனைத்து திருநங்கைகளும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News