திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தின் ஒரு பகுதி போக்குவரத்திற்கு திறப்பு

போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தின் ஒரு பகுதி திறந்து விடப்பட்டுள்ளது.

Update: 2022-01-21 14:36 GMT

திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தின் ஒரு பகுதி போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டு இருப்பதை மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பார்வையிட்டார்.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக ஜி.கார்த்திகேயன், பொறுப்பேற்றதில் இருந்து திருச்சி மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலின்றியும், முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டும், சாலை விபத்துக்கள் குறைய நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும் சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இதன் தொடர்ச்சியாக திண்டுக்கலில் இருந்து திருச்சி நோக்கிவரும் அனைத்து வாகனங்களும், அரிஸ்டோ மேம்பாலத்தின் கீழ் வந்து மத்திய பேருந்து நிலையம், இரயில்வே ஸ்டேசன் காந்திமார்க்கெட், எடமலைப்பட்டிபுதூர் மற்றும் நகரத்தின் முக்கிய பகுதிகளுக்கு சென்று கொண்டிருந்தன.

இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அரிஸ்டோ மேம்பாலத்தின்கீழ் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு, கமிஷனர் கார்த்திகேயன், நேரடியாக ஆய்வு செய்தும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, தெற்கு சரக போலீஸ் துணை கமிஷனர் மற்றும் போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி, போக்குவரத்தை சீர்செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி அரிஸ்டோ மேம்பாலத்தின் கருமண்டபம் சாலை முகப்பு பகுதியில் பாலத்தின்மேல் செல்லமால் இருக்க இதுவரை பாலத்தின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த தடுப்புக்கள் அகற்றப்பட்டு, கருமண்டபத்திலிருந்து வரும் இருசக்கர வாகனம், ஆட்டோ மற்றும் கார்கள் இனிவரும் காலங்களில் அரிஸ்டோ மேம்பாலம் வழியாக பாலத்தின்மேல் சென்று மத்திய பேருந்து நிலையம், இரயில்வே நிலையம், காந்திமார்க்கெட், எடமலைப்பட்டிபுதூர் ஆகிய பகுதிகளுக்கு போக்குவரத்து இடையூறுகள் இன்றி, காலை 7 மணிமுதல் இரவு 10 மணிவரை இருசக்கர மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் செல்ல வழிவகை செய்யப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருச்சி மாநகரத்தில் சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், போக்குவரத்து இடையூறின்றி சீரக இயங்கவும், பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்யவதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர்  தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News