திருச்சியில் லாரியில் வந்த தனியார் நிறுவன அதிகாரியை தாக்கி நகை பறிப்பு
திருச்சியில் லாரியில் வந்த தனியார் நிறுவன அதிகாரியை தாக்கி நகை பறித்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.;
திருச்சி அருகே லாரியில் வந்த தனியார் நிறுவன அதிகாரியை தாக்கி நகை பறித்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் களத்தூர் கிராமப்பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 32). இவர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மெட்டல் கம்பெனியில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று திண்டிவனம் செல்வதற்காக லாரியில் மோகன்ராஜ் சென்றுகொண்டிருந்தார்.
அப்பொழுது திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் சஞ்சீவி நகர் அருகே லாரியை மோகன்ராஜ் நிறுத்தினார். அப்பொழுது 3 மர்ம ஆசாமிகள் மோகன்ராஜிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர். இது குறித்து கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம ஆசாமிகள் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். மோகன் ராஜ் எதற்காக லாரியில் இருந்து இறங்கினார் என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தினர்.
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் பகுதியில் ஏற்கனவே பல நபர்களிடம் இதுபோன்ற வழிப்பறி சம்பவங்கள் நடந்து உள்ளன. நகை பணத்தை இழந்தவர்கள் போலீசில் புகார் அளித்து உள்ளனர். அந்த பகுதியில் ஒரு கும்பல் பதுங்கி இருந்து கொண்டு தவறான நோக்கத்தில் வருபவர்களிடம் வழிப்பறியில் ஈடுபடுவது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. பெண்களை காட்டியும் கடந்த காலங்களில் வழிப்பறி நடந்து உள்ளது. எனவே இந்த சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணிகளை மேற்கொள்ளவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.