திருச்சி காவிரி கரையில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டம்
திருச்சி காவிரி கரையில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டம் தயாரிக்க உள்ளது.
திருச்சி காவிரி கரையோரம் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
திருச்சி மாநகராட்சி சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஓடத்துறை சாலையை ஒட்டி காவிரி ஆற்றங்கரையில் பல்வேறு வசதிகளுடன் திருச்சி மாநகரின் முதல் ஆற்றங்கரைப் பூங்கா அமைக்கப்பட இருக்கிறது.
திருச்சி மாநகராட்சி சார்பில் சென்னையைச் சேர்ந்த ஆலோசகர் மூலம் விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) தயாரிக்கத் தொடங்கி இருக்கிறது. திருச்சி மாவட்டத்தில் மிகச்சிறந்த பொழுதுபோக்கு இடங்கள் இல்லாததால், திருச்சி மாநகராட்சி, மேலசிந்தாமணி மற்றும் ஓடத்துறை சாலை வழியாக காவிரி ஆற்றின் தென் கரையை கண்டறிந்து பூங்காவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக ரயில்வே பாலத்திற்கும் தில்லைநாயகம் படித்துறைக்கும் இடையே சுமார் 240 மீட்டர் நீளத்தில் ஆற்றங்கரையில் இருந்து 50 அடி அகல இடம் இந்த பூங்காவினை அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, தெற்கு கரையோரம் ஆங்காங்கே குப்பைகள் குவியல் குவியலாக குவிந்து கிடக்கிறது இதுமட்டுமல்லாமல் ஓயாமரி சுடுகாடு இருப்பதால் அந்த பகுதியை பயன்படுத்தப்படாமல் உள்ளது.
ஆற்றங்கரை சீரமைப்பதன் மூலம் அந்த இடத்துடன் தொடர்புடைய களங்கத்தை போக்கவும், நல்ல காரியத்திற்கு பயன்படுத்தவும் இந்த பூங்கா நிச்சயம் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்டத்தின்படி, உள்ளாட்சி அமைப்பு சார்பில் கரையோரம் பாதுகாப்பு வேலி அமைத்து, நடைபாதை அமைக்கும் பணியானது மேற்கொள்ளப்பட உள்ளது.
இதுமட்டுமல்லாமல் இந்த பூங்காவில் சுமார் 5 ஆயிரத்து 460 சதுர மீட்டர் நிலப்பரப்பில் ஒரு ஆம்பிதியேட்டர், குழந்தைகள் பூங்கா மற்றும் யோகா மண்டபம் ஆகியவையும் இந்த பூங்காவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தின் அடையாளமான ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், மலைக்கோட்டை மற்றும் மறுகரையில் உள்ள திருவானைக்கோயில் ஆகியவற்றை மக்கள் எளிதாக காணக்கூடிய வகையில் சுமார் 9 மீட்டர் உயரம் கொண்ட கண்காணிப்பு கோபுரமும் இந்த பூங்காவில் அமைக்கப்படும்.
ஏற்கனவே திருச்சி மாவட்டத்தில் உய்யகொண்டான் கால்வாய் கரையோரம் உருவாக்கப்பட்ட பூங்காக்களை ஒப்பிடும்போது இந்த பூங்கா மிகவும் தனித்துவமாக இருக்கும். தற்போது இந்த பூங்கா அமைக்கும் மாதிரி திட்டத்திற்கு சுமார் 14 கோடி ரூபாய் செலவாகும். ஆற்றின் அருகே மக்கள் அமர்ந்து பேசும் வகையில் கரையில் பெஞ்சுகள் அமைக்கப்படும்.
மேலும் அதன் அருகில் நவீன தெருவிளக்குகள் அமைக்கப்படும். இவ்வாறு மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும் இங்கு வரும் பார்வையாளர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி வழங்க குடிமை அமைப்பு திட்டமிட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி, ஆற்றில் பாதிப்பு ஏற்படாத வகையில், மண் பரிசோதனை செய்து, டிபிஆர் தயாரிக்க, 16 லட்சம் ரூபாயை ஏற்கனவே அனுமதித்துள்ளது.
இது தொடர்பான பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாப்பு தடை சான்றுகள் வழங்கப்படும். தேர்தல் நடத்தை முடிந்தவுடன் பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரி ஒரிவர் கூறினார்.
காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அதிமுக ஆட்சியில் கோடை காலத்தில் மட்டும் தற்காலிக பொழுது போக்கு பூங்கா அமைக்கப்பட்டது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த நிலையில் காவிரி கரையில் நிரந்தரமாக பூங்கா அமைக்கப்பட்டதால் அது அனைத்து தரப்பு மக்களையும் கவரும் என்பதில் ஐயம் இல்லை.