திருச்சி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று 834 பள்ளிகள் திறப்பு
திருச்சி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று 834 பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.;
மாணவிகளுக்கு ஆசிரியைகள் மலர்கள் கொடுத்து வரவேற்றனர்.
கோடை விடுமுறை முடிந்து திருச்சி மாவட்டத்தில் இன்று 834 பள்ளிகள் திறக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று 6 முதல் 12-ம் வகுப்புகள் வரை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறப்பதற்கான தேதியில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
திருச்சி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. பள்ளிகள் இன்று திறக்கப்படுவதை முன்னிட்டு நேற்றே மாணவ, மாணவிகள் பள்ளி செல்வதற்கான முன்னேற்பாடுகளை தயார் செய்தனர்.குறிப்பாக புதிய புத்தகப்பை, நோட்டு, பேனா, பென்சில், புதிய சீருடைகள், புதிய காலனி, தண்ணீர் பாட்டில் என்று அனைத்தையும் கடந்த சில நாட்களுக்கு முன்பே வாங்கி விட்டனர்.
இன்று காலை எழுந்ததும் குளித்து, சீருடை அணிந்து கடவுளை வணங்கி, பெற்றோரிடம் ஆசி வாங்கி பள்ளிக்கு புறப்பட்டனர். இதனால் இன்று காலை 1 மாதத்துக்கு பிறகு திருச்சி மாநகரில் உள்ள முக்கிய சாலைகள் பரபரப்பாக காணப்பட்டது. பள்ளி வேன்கள், ஆட்டோக்களில் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு புறப்பட்டு சென்றனர்.அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் இன்று மேல்நிலைப்பள்ளிகளை பொறுத்தவரை, அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளி, நகராட்சி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, மத்திய அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், பகுதி உதவி பெறும் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேசன் என 298 பள்ளிகள், 242 உயர்நிலைப்பள்ளிகள், 294 நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 834 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றது.
இன்று காலை 9 மணிக்கு இறை வணக்கத்துடன் பள்ளிகள் தொடங்கின. பள்ளிகள் இன்று திறந்ததும் தமிழக அரசு அனைத்து பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக இந்த ஆண்டு 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.அக்னி நட்சத்திர காலத்தை தாண்டியும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. அதிலும் கடந்த 2 நாட்களாக அதிக வெயிலின் தாக்கம் இருந்த போதும் இன்று காலை பள்ளிகள் திறக்கப்பட்டதால் வெயிலை பொருட்படுத்தாமல் மாணவர்கள் உற்சாக மனநிலையுடன், மீண்டும் தங்களது நண்பர்களை சந்திக்கும் ஆவலுடனும், புதிய பாடங்களை எதிர்கொள்ளும் மன நிலையுடனும் பள்ளிகளுக்கு வந்தனர்.பள்ளியில் தங்களது தோழர்கள், தோழிகளை குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின்னர் பார்த்ததும் ஒருவருக்கொருவர் கைகொடுத்தும், கட்டித்தழுவியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதேபோல் திருச்சியில் உள்ள பள்ளிகளில் பயிலும் வெளியூரை சேர்ந்த மாணவ, மாணவிகள், விடுதிகளில் தங்கி படிப்பவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் நேற்று மாலை முதலே பள்ளிகளுக்கு வரத்தொடங்கினர். மேலும் பெட்டி, படுக்கைகளுடன் அவர்கள் வந்திருந்தனர்.பின்னர் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு ஆசீர்வாதம் வழங்கியும், வாழ்த்து தெரிவித்தும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நன்கு படிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறியும் விட்டுச்சென்றனர்.