திருச்சி ரயில் நிலையத்தில் பயணியிடம் சிக்கியது 7 கிலோ தங்க நகைகள்
திருச்சி ரயில் நிலையத்தில் பயணியிடம் சிக்கிய 7 கிலோ தங்க நகைகள் சிக்கியது தொடர்பாக ரூ. 17 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது;
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 7 கிலோ தங்க நகைகள் சிக்கின.
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று இரவு காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. அதில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் பெட்டிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கொல்கத்தாவை சேர்ந்த 2 பேர், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரு நபர் சந்தேகத்திற்கிடமாக 7 கிலோ எடையுள்ள வளையல், நெக்லஸ், ஆரம், நெத்திச்சூடி உள்ளிட்ட ஆபரண தங்க நகைகள் கொண்டு செல்வது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.3 கோடி ஆகும்.
ஆனால், அதற்குரிய ரசீதோ, ஆவணங்களோ ஏதும் இல்லாததால் வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். திருச்சியில் உள்ள மாநில வரி அலுவலர் செல்வம், துணை மாநில வரி அலுவலர் சுந்தர்ராஜன் ஆகியோர் நேரடியாக வந்து ஆய்வு செய்து எவ்வித ஆவணங்களும் இல்லாததால் அதனை கொண்டு வந்தவர்களுக்கு ரூ.17 லட்சம் அபராதம் விதித்தனர்.
இது தொடர்பாக 3 பேரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அதற்கான தொகையை அவர்கள் கட்டினால் அதை விடுவிப்பதற்கு தயாராக இருப்பதாக ரெயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு தங்க ஆபரண நகைகளை எடுத்து சென்று விற்பனை செய்வதாகவும் மூவரும் தெரிவித்தனர். எனவே, ரொக்கமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாக உரிய வரியினை செலுத்தும் பட்சத்தில் உடனடியாக ஆபரண நகைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.