திருச்சி: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 550 அ.தி.மு.க.வினர் மீது வழக்கு
திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் உட்பட 550 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த மாதம் 19-ந்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அன்று சென்னையில் கள்ள ஓட்டு போட வந்ததாக ஒருவரை பிடித்து, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், முன்னாள் சபாநாயகருமான டி.ஜெயக்குமார் தலைமையில்போலீசில் ஓப்படைத்தனர்.
அப்போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மறுநாள் ஜெயக்குமார் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். இந்த கைது சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று அ.தி.மு.க.வினர் அந்தந்த மாவட்ட தலைநகர்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல திருச்சி மாநகர், புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு ஆகிய ஒன்றிணைந்த திருச்சி மாவட்டம் சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்கள், மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி, புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி ப.குமார், முன்னாள் அமைச்சர்கள் பூனாட்சி, சிவபதி, அண்ணாவி, வளர்மதி, ஆவின் சேர்மன் கார்த்திகேயன் மற்றும் 75 பெண்கள் உள்ளிட்ட 550 பேர் மீது கோட்டை போலீசார் 550 பேர் மீது 4 சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.