தொழில் முனைவோர் பட்டய படிப்பில் சேர்ந்து படிக்க 500 பேருக்கு வாய்ப்பு

தொழில் முனைவோர் பட்டய படிப்பில் சேர்ந்து படிக்க 500 பேருக்கு வாய்ப்பு இருப்பதாக கூடுதல் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-23 12:53 GMT

திருச்சியில் தொழில் முனைவோர் பட்டய படிப்பு குறித்த விளக்க கூட்டம் கூடுதல் தலைமை செயலாளர் உமாசங்கர் தலைமையில் நடைபெற்றது.

தொழில் முனைவோர் ஓர் ஆண்டு பட்டய படிப்பில் சேர 500 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் தொழில் முனைவோருக்கான ஓராண்டு பட்டய படிப்பில் சேர்வதற்கான விளக்க கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குனர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் உமாசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் முன்னிலை வகித்தார் .

இந்த கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் உமா சங்கர் பேசியதாவது:-

இந்த திட்டத்தின் நோக்கம் புத்தாக்கத்தின் மூலம் தொழில் முனைவோரை உருவாக்குவது ஆகும். இந்த நிறுவனம் குறு, சிறு, நடுத்தர தொழில் மேம்பாட்டு துறையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தில் சேர்ந்து படிக்க தமிழக முழுவதும் முதலாம் ஆண்டில் 500 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அதில் திருச்சிக்கு 25 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதே போல ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பயிற்சி பெற்றவர்கள் தொழில் முனைவோராக மாறி நிறைய பேருக்கு வேலை கொடுக்க வேண்டும். அரசாங்கம் உண்மையான தொழில் முனைவோரை கண்டுபிடித்து அவர்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்ல இந்த திட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது.

மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் ஆன்லைனில் வெளியாகும். இந்த படிப்பில்  சேர ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படிப்பு படித்து இருக்க வேண்டும். 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இதனை படித்து முடிக்க ஒரு லட்சம் வரை செலவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் பேசும்போது ‘இந்த திட்டத்தில் சேர்ந்து படிக்க இளங்கலை பட்டம் பயின்று இருக்க வேண்டும். தொழிலின் மீது ஆர்வம் இருக்க வேண்டும். இதில் சேர்வதற்கு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒதுக்கீடு இருக்கிறது எனது விருப்பம் திருச்சியில் இருந்து செல்லக்கூடிய மாணவர்கள் அனைவரும் தொழில் முனைவோராக மாற வேண்டும்’ என்றார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி , இடிஐ திட்ட அலுவலர் மகாலட்சுமி ,மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமலிங்கம், உயர்கல்வி நிறுவன பிரதிநிதிகள், சிறு குறு தொழில் சங்க பிரமுகர்கள் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News