திருச்சி கோட்டை பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்ற 5 பேர் கைது
திருச்சி கோட்டை பகுதியில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.;
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்காக ஏராளமான மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக கோட்டை போலீசாருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கோமதி (வயது 33), மற்றும் வீரக்குமார் (வயது 35) ஆகியோர் ஏராளமான மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பதற்காக பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ. 68040 மதிப்புள்ள 567 குவாட்டர் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதே போல அந்த பகுதியில் மது விற்ற மணிகண்டன் (வயது 23), விக்னேஷ் (வயது 22), பிரிஜித் (வயது 35) ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.20, 220 மதிப்புள்ள 183 குவாட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.