திருச்சி மசாஜ் சென்டரில் விபச்சாரம் செய்த 5 பேர் கைது

திருச்சி மசாஜ் சென்டரில் விபச்சாரம் செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-14 14:15 GMT

பைல் படம்.

புதுச்சேரி மாநிலம் குணிக்கம் பகுதியில் உள்ள கோரைக்கனியை சேர்ந்தவர் உதயகுமார் மகன் ராஜ்கிரண் (வயது 24). இவர் திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் தங்கி திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் ஆன்லைனில் தனக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று ஒரு செயலி மூலம் சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள சாரா லாட்ஜில் செயல்பட்டு வரும் ஒரு மசாஜ் சென்டருக்கு முன் பதிவு செய்துள்ளார்.

அதன்படி மசாஜ் செய்வதற்காக நேற்று ராஜ்கிரண் அந்த மசாஜ் சென்டருக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஆண்கள் இரண்டு இளம் பெண்களை அரைகுறை ஆடையுடன் காண்பித்து இவரிடம் விபச்சாரத்திற்காக அணுகியுள்ளனர்.

இதை பிடிக்காத ராஜ்கிரண் உடனடியாக அங்கிருந்து தப்பித்து வெளியே வந்து திருச்சி கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.

அப்போது அங்கு திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த சுபலட்சுமி (வயது 24), திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த தமிழ் ராணி (வயது 33) மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த கருணாநிதி மகன் கலைஞர் (வயது 37), திருச்சி மாவட்டம் லால்குடி வடுகர்பேட்டையை சேர்ந்த வில்பிரட்மார் சலீனா (வயது 40), மற்றும் ஓட்டல் மேலாளர் திருச்சி மாவட்டம் முசிறி பகுதியைச் சேர்ந்த ரவி (வயது 49) என்பவர்கள் இருந்துள்ளனர். மேலும் போலீசார் வருவதை தெரிந்து கொண்டு ஷாஜகான் மற்றும் சந்தோஷ் என்ற இருவர் தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து போலீசாரின் விசாரணையில், ஆன்லைனில் செயலி ஒன்றை உருவாக்கி தொடர்ந்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் செய்து வந்தது தெரிந்தது.

இதையடுத்து கோட்டை போலீசார் 2 பெண்கள் உட்பட 5 பேரையும் கைது செய்தனர். அதில் 2 பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர். மற்ற 3 பேரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News