திருச்சி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 485 மனுக்களுக்கு தீர்வு
திருச்சி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 485 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.;
மாற்றுத்திறனாளி ஒருவரிடம் மனு வாங்கினார் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று (03.04.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், இதரச் சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, நலத் திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 485 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவா;களிடம் அளிக்கும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெறும் போது அவர்கள் அமரவும், மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக, மாவட்ட நலப்பணிநிதிக்குழு நிதியிலிருந்து ரூபாய் 1,47,500 மதிப்பீட்டில் 3 பேர் அமரக்கூடிய 10 செட் இருக்கைகள் அதாவது 130 நபர்கள் அமரக்கூடிய வகையில் வழங்கப்பட்டது.
மேலும், பட்டு வளர்ச்சித் துறையின் சார்பில், ஒரு ஏக்கரில் அதிகமான பட்டு முட்டை தொகுதிகள் வளர்ப்பு மற்றும் பட்டுக்கூடு அறுவடை செய்த மாவட்ட அளவிலான மூன்று சிறந்த விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.25,000க்கான காசோலையை சண்முகவேல் அவர்களுக்கும், இரண்டாம் பரிசாக ரூ.15,000க்கான காசோலையை கண்ணன் என்பவருக்கும், மூன்றாம் பரிசாக ரூ.10,000க்கான காசோலையை செந்தில்குமார் என்பவருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதிப்குமார் வழங்கி பாராட்டி, பட்டு வளர்ச்சி உற்பத்தி செய்த முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர்செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நிலம்) ஏழுமலை, உதவி ஆணையர்(கலால்) ரெங்கசாமி, உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.