447 கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்- திருச்சி மாநகராட்சி நடவடிக்கை
திருச்சியில் இடிந்து விழும் ஆபத்தான நிலை கட்டிடங்களின் உரிமையாளர்கள் 447 பேருக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.;
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழையினால் இடியும் நிலையில் உள்ள கட்டிடங்கள், குடியிருப்புகள் குறித்து கண்டறியும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பழமையான கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதையொட்டி ஒரு சிலர் தாமாகவே முன்வந்து இடிந்த நிலையில் உள்ள தங்களது கட்டிடங்களை சீரமைக்கவும், பழுது பார்க்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் 447 கட்டிடங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளதாக தெரிகிறது. அந்த கட்டிடங்கள் எந்த நேரமும் இடிந்து விழக்கூடிய அபாயத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போதையநிலையில் மாநகராட்சி பொன்மலை கோட்டத்தில் அதிகபட்சமாக 162கட்டிடங்களும், ஸ்ரீரங்கத்தில் 108 கட்டிடங்களும், கோ-அபிஷேகபுரம்கோட்டத்தில் 102 கட்டிடங்களும், அரியமங்கலம் கோட்டத்தில் 75 கட்டிடங்களும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. இதில் 23 கட்டிட உரிமையாளர்கள் மீது போலீசில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
பழுதடைந்த கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் அல்லது இடித்து அகற்ற வேண்டும்.இதனை மீறும் கட்டிட உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.