பெண்ணை தாக்கி நகை பணம் கொள்ளையடித்த 4 பேருக்கு தலா 7 வருடம் சிறைத்தண்டனை
வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகை பணம் கொள்ளையடித்த 4 பேருக்கு தலா 7 வருடம் சிறைத்தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
திருச்சியில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகை, பணம் கொள்ளை யடித்த நான்கு பேருக்கு தலா 7 வருடம் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
திருச்சி விமான நிலைய பகுதி குளவாய் பட்டி கலர்பட்டி ரோடு வளன் நகர் பகுதியில் வசித்து வருபவர் சகாயமேரி. கணவரை பிரிந்த இவர் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 14 -6 -2016 அன்று இவர் தனியாக வீட்டில் இருந்தார். அப்போது திருச்சி தென்னூர் காயிதே மில்லத் நகரை சேர்ந்த தம்பி ராஜா என்கிற ஷேக் அப்துல் காதர் (27 ) நேரு நகரை சேர்ந்த சபீர் முகமது வயது (36 ), தென்னூர் குத்பிஷா நகரை சேர்ந்த சாதிக் பாட்சா( 36 )சங்கிலியாண்ட புரம் உசேன் தெருவை சேர்ந்த முனீர் அகமது (30) ஆகிய நான்கு பேரும் திடீரென வீட்டுக்குள் புகுந்து சகாய மேரியின் கழுத்தில் கத்தியை வைத்தனர்.
பின்னர் அவர்கள் சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி வீட்டில் இருக்கும் பணம் நகை எல்லாவற்றையும் எடுத்துக் கொடு என மிரட்டினார்கள். சகாய மேரி தன்னிடம் எதுவும் இல்லை எனக் கூறியதால் ஆத்திரமடைந்த அவர்கள் நான்கு பேரும் சகாய மேரியின் காதில் அணிந்திருந்த கம்மல் மற்றும் கால் கொலுசு ஆகியவற்றை பறித்துக் கொண்டனர்.
பின்னர் மேஜையில் இருந்த லேப்டாப், ஸ்மார்ட் செல்போன்கள் மற்றம் ரூ.400 பணம் ஆகியவற்றையும் பறித்துக் கொண்டு தாங்கள் வந்திருந்த இருசக்கர வாகனங்கள் ஏறி தப்பி ஓடினார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக விமான நிலைய போலீசார் நான்கு பேரையும் கைது செய்து திருச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சாட்சிகள் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு கூறப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட ஷேக் அப்துல் காதர் உள்பட நான்கு பேருக்கும் தலா 7 வருடம் கடங்காவல் சிறைத் தண்டனை, தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் அபராத தொகை மொத்தம் ரூ. 40 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சகாயமேரிக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி மீனா சந்திரா தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வழக்கறிஞர் ஹேமந்த் ஆஜராகி வாதாடினார்.