1500 லிட்டர் பாண்டி சாராயம் கடத்திய 4 பேர் கைது - 2 வாகனங்கள் பறிமுதல்

1500 லிட்டர் பாண்டி சாராயம் கடத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-01-14 02:42 GMT

பறிமுதல் செய்யப்பட்ட பாண்டிசாராயம் மற்றும் கைதானவர்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் காவல் நிலைய ஆய்வாளர் செல்வி மற்றும் காவல் ஆளிநர்கள் காளஹஸ்திநாதபுரம் மாத்துார் சாலையில் வாகன தணிக்கை ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த PY 01 AB 3304 பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் 1500 லிட்டர் பாண்டிச்சேரி சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மேற்படி காரில் பாண்டி சாராயத்தை கடத்தி வந்த மன்னம்பந்தல் செங்கமேட்டு தெருவை சேர்ந்த சதிஷ் மகன் குமார் மற்றும் மயிலாடுதுறை கீழ நாஞ்சில்நாடு தோப்பு தெருவை சேர்ந்த பரமசிவம் மகன் ராஜூ ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு உதவியாக இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த திருக்களாச்சேரி தெற்கு தெருவை சேர்ந்த செந்தில் மகன் முருகேசன் என்பவரையும் கைது செய்தனர். மேற்படி கடத்தல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், கடத்தி வரப்பட்ட பாண்டி சாராயம் மயிலாடுதுறை முளப்பாக்கத்தை சேர்ந்த மணி தேவர் மகன் அழகர் மற்றும் தூக்காணங்குளத்தை சேர்ந்த பிரபு ஆகியோருக்கு காரைக்காலில் இருந்து எடுத்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அழகரை காவல்துறையினர் கைது செய்தனர். தப்பியோடிய மயிலாடுதுறை தூக்காணங்குளத்தை சேர்ந்த பிரபுவை தேடி வருகின்றனர்.


மேற்படி பாண்டி சாராயம் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்த தகவலை அறிந்த மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், உடனடியாக மது கடத்தலை தடுத்து நிறுத்திய சம்மந்தப்பட்ட செம்பனார்கோயில் காவல் நிலைய காவல் ஆளிநர்களை நேரில் வர அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

Tags:    

Similar News