திருச்சி அருகே ரயிலை கவிழ்க்க முயன்ற ஊராட்சி துணை தலைவர் உள்பட 3 பேர் கைது
திருச்சி அருகே ரயிலை கவிழ்க்க முயன்ற ஊராட்சி துணை தலைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
ரயில் தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்ட லாரி டயர்கள்.
திருச்சி அருகே ரயிலை கவிழ்க்க முயன்ற வழக்கில் ஊராட்சி துணைத் தலைவர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி -கல்லகம் எங்களுக்கு இடையே மேலவாளாடி என்ற இடத்தில் கடந்த ஜூன் 1ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை தவிக்க சதி நடைபெற்றது. தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு லாரி டயர்களை ரயில் என்ஜின் டிரைவர் பார்த்துவிட்டதால் ரயிலை நிறுத்தினார். ஆனாலும் ரயில் அந்த டயர்களின் மீது ஏறி நின்றது. டிரைவரின் சாமர்த்தியத்தால் ரயில் தடம் புரளாமல் தப்பித்தாலும் அந்த ரயிலின் நான்கு பெட்டிகளில் மின் பழுது ஏற்பட்டது .இது பற்றிய தகவலை என்ஜின் டிரைவர் தெரிவித்ததும் திருச்சியில் இருந்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின்பழுததை சரி செய்து ரயிலை புறப்பட வைத்தனர். இதன் காரணமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 40 நிமிட நேரம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை லாரி டயர்களை வைத்து கவிழ்க்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இது தொடர்பாக விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். சம்பவம் நடைபெற்ற இடம் திருச்சி மாவட்டம் என்பதால் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் சம்பவ இடத்திற்கு சென்று நேரடி விசாரணை நடத்தினார்.
மேலும் இந்த சதி செயலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்பதற்காக தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது. அவர்கள் லால்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தினார் .வாஞ்சிநாதன் என்ற டாக்சி டிரைவரிடம் விசாரணை நடத்திய போது இந்த சதி செயலில் ஈடுபட்டது மூன்று பேர் என தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து வாளாடியை சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பிரபாகரன் மற்றும் வெங்கடேஷ், கார்த்திக் ஆகிய மூன்று பேரை ரயில்வே போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் எதற்காக ரயிலை கவிழ்க்க முயன்றார்கள்? சதி திட்டம் தீட்டியதற்கான காரணம் என்பது பற்றி இதுவரை தகவல் எதுவும் போலீசார் வெளியிடவில்லை.