திருச்சி கோட்டை பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது
திருச்சி கோட்டை பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
திருச்சி கோட்டை போலீஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அரங்கநாதன், சப்-இன்ஸ்பெக்டர் கோபால் மற்றும் போலீசார் இன்று கோட்டை பகுதிக்கு உட்பட்ட பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் அங்கு வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரித்தபோது அந்த மோட்டார் சைக்கிள் திருட்டு மோட்டார் சைக்கிள் என்று தெரியவந்தது.
இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளையும், அதில் வந்த 3 பேரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில் சிந்தாமணி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மகாமணி (வயது 29), ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த ராஜா (வயது 29), இ.பி.ரோடு கமலா நேரு நகரைச் சேர்ந்த தினேஷ்குமார் (வயது 29) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தியதில், கடந்த மாதம் 22-ஆம் தேதி திருச்சி பெரிய கம்மாள தெருவில் உள்ள மெஜிப்பால் (வயது 42) என்பவரது மோட்டார் சைக்கிள் திருடியது தெரியவந்தது. அதே போல திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே தேவக்கோட்டையை சேர்ந்த வினோத் என்பவர் நிறுத்தி இருந்த ஒரு பஜாஜ் பல்சர் உள்ளிட்ட மேலும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் திருடியது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.