24 மணி நேரமும் குடிநீர்: திருச்சி மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் தகவல்

7 வார்டுகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கப்படும் என திருச்சி மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-29 16:54 GMT

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

திருச்சி நகரில் உள்ள 7 வார்டுகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கப்படும் என இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மேயர் அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று 2023 -2024 ம் நிதி ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை (பட்ஜெட்)  தாக்கல் செய்வதற்கான கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆணையர் வைத்திநாதன், துணைமேயர் திவ்யா முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் பட்ஜெட்டை மாநகராட்சி வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் முத்துச்செல்வம் மேயர் அன்பழகனிடம் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து பட்ஜெட் உரை படிக்கப்பட்டது.

இந்த பட்ஜெட்டில் மாநகராட்சியின் மொத்த வருவாய் ரூ.1,026.70 கோடி. மொத்த செலவு ரூ.1,025 கோடி என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் மூலம் ரூ.74.80லட்சம் உபரி பட்ஜெட் ஆக தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* திருச்சி மாநகராட்சி வார்டு எண் 51 முதல் 57 வரை உள்ள 7 வார்டுகளில்24 மணி நேரமும் மக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பது.

* திருச்சி மத்திய பஸ் நிலைய வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த அரசு அலுவலகங்கள் கட்டுதல் உள்பட 10 பணிகளை மேற்கொள்வது.

* திருச்சி மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 100 கி.மீ நீள மண்சாலைகளை தார் சாலைகளாகவும், சிமெண்ட் காங்ரீட் சாலைகளாகவும், மற்றும் பேவர் பிளாக் பொருத்தப்பட்ட சாலைகளாகவும் மாற்ற நடவடிக்கை எடுப்பது.

* மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் மண்டலத்திற்கு ஒரு சமுதாய நல கூடத்தை தலா ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டுவது.

* ஒவ்வொரு வார்டிலும் தலா ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிவால் அமைப்பது.

* பல்வேறு திட்டங்களின் கீழ் நகரம் முழுவதும் 250 கிமீ  நீளத்திற்கு என்ட் டூ என்ட் என்ற அடிப்படையில் சாலைகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுப்பது.

*கொல்லாங்குளத்தை ரூ.2.70 கோடி மதிப்பீட்டில் அழகு படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* மேலும் திருச்சி மிளகுபாறை குளம், சின்ன மிளகுபாறை குவாரி,தாமரை குளம், கொட்டப்பட்டு குளம், பஞ்சப்பூர் ஊரணி குளம் ஆகியவற்றின் கரைகளை பலப்படுத்தி நடைபாதை அமைப்பது, மரங்கள் நட்டு படிப்படியாக மேம்படுத்த நடவடிக்கை எடுப்பது.

* பஞ்சப்பூரில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் டைடல் பார்க்க அமைக்க நடவடிக்கை எடுப்பது.

* பஞ்சப்பூரில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் நடத்துவதற்கான ஒலிம்பியாட் விளையாட்டு அரங்கம் அமைப்பது.

*பஞ்சப்பூரில் காய்கறி மொத்த வணிக வளாகம் அமைப்பது.

*திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தை சுற்றிலும் வண்ண மின் விளக்குகள் அமைத்து அதனை ஒளிரச்செய்வது.

மேற்கண்டவை உள்பட பல்வேறு அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்று உள்ளது.

Tags:    

Similar News