தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல்
திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் கலெக்டர் ஆபீஸ் சாலையில் ஒரு பீடா ஸ்டால் மற்றும் திருவெறும்பூரில் உள்ள ஒரு மளிகை கடை ஆகியவற்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து அந்த கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஏற்கனவே அபராதம் வகித்தனர்.
ஆனால் அதையும் மீறி அந்த கடைகளில் தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறை ஆணையர் லால்வேனா உத்தரவின் பேரில் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பாண்டி, வடிவேல்,இப்ராஹிம் , செல்வராஜ், சண்முகம் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று இரவு அந்த இரண்டு கடைகளுக்கும் சீல் வைத்தனர்.
இது தொடர்பாக டாக்டர் ரமேஷ் பாபு கூறுகையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மீது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 இல் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொது மக்களும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறிந்தால் எங்களுக்கு 9944959595 மற்றும் 9585959595 என்ற செல்போன் எண்களில் புகார் தெரிவிக்கலாம் என கூறினார்.