திருச்சியில் நன்னடத்தை விதி மீறிய 2 ரவுடிகள் மீண்டும் சிறையில் அடைப்பு
திருச்சியில் நன்னடத்தை விதி மீறிய 2 ரவுடிகள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.;
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் பொறுப்பேற்ற பின்னர் ரவுடிகளை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காவல்நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி செல்வம் என்கிற வல்லரசு (வயது 33) மற்றும் கோட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ரபீக் என்கிற முகமது ரபீக் (26)ஆகிய இருவரும் கமிஷனர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக திருச்சி நிர்வாக செயல்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது அவர்கள் இருவரும் நாங்கள் இனிமேல் ஒரு வருட காலத்திற்கு குற்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என உறுதிமொழி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையில் அவர்கள் நன்னடத்தை விதியின் கீழ் பிணையில் விடப்பட்டிருந்தனர்.
ஆனால் இந்த உறுதிமொழி பத்திரத்தை மீறி அவர்கள் இருவரும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் பிடித்து நிர்வாக செயல்துறை நடுவர் முன் ஆஜர் படுத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. செல்வம் என்கிற வல்லரசு 298 நாட்களும், ரபீக் என்கிற முகமது ரபீக் 204 நாட்களும் எந்தவித விசாரணையுமின்றி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருப்பார்கள்.
இதுபோல் நன்னடத்தை உறுதிமொழிப் பத்திரத்தை மீறிய ரவுடிகள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.