திருச்சி காப்பகத்தில் இருந்த 2 குழந்தைகள் இறப்பு: காரணம் என்ன?

திருச்சி காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 2 குழந்தைகள் இறப்பிற்கான காரணம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.;

Update: 2023-04-13 17:36 GMT

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் மாம்பழச்சாலை பகுதியில் அமைந்துள்ள சாக்சீடு புனித மார்ட்டின் சிறப்பு தத்துவள மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த கீழ்க்கண்ட 2 குழந்தைகள் மாகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தொடர்பான விவரங்கள் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

முதல் பெண் குழந்தை இறப்பு தொடர்பான விவரம்:

பெரம்பலூர் மாவட்ட குழந்தை நலக்குழுவில் தாயாரால் ஒப்படைவு செய்யப்பட்ட பெண் குழந்தை (பிறந்த தேதி - 11.12.2022) மேற்கண்ட தத்துவள மையத்தில் 23.01.2023 அன்று அனுமதிக்கப்பட்டு பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட்டு வந்த நிலையில், 24.02.2023 (குழந்தையின் எடை 2.250 கி.கி) அன்று சளி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு மேற்கண்ட அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டதை தொடர்ந்து 02.03.2023 அன்று மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து மீண்டும் இல்லம் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

29.03.2023 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் மேற்கண்ட தத்து நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்கு பிறகு, மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவுறுத்தலின்படி மேற்கண்ட தத்து நிறுவனத்தில் கூடுதலாக நான்கு ஆயாக்கள்  பணியமர்த்தப்பட்டு, மொத்தம் பதினொரு ஆயாக்கள் குழந்தைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மேற்கண்ட அரசு மருத்துவமனையிலிருந்து தினந்தோறும் ஒரு குழந்தை மருத்துவர் மேற்கண்ட இல்லக் குழந்தைகளை பரிசோதித்து உரிய சிகிச்சை வழங்கிடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவரால் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 30.03.2023 அன்று குழந்தைகளை பரிசோதித்த மருத்துவரின் வழிகாட்டுதலின்படி 8 குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பொருட்டு மேற்கண்ட அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கி வந்த நிலையில், ஒரு பெண் குழந்தைக்கு 06.04.2023 அன்று கடுமையான மூச்சுகுழாய் நிம்மோனியா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி, நேற்று (12.04.2023) முற்பகல் 11.45 மணிக்கு உயிரிழந்தது.

இரண்டாம் பெண் குழந்தை இறப்பு தொடர்பான விவரம்:

24.02.2023 அன்று புதுக்கோட்டை மாவட்டம், குழந்தை நலக்குழுவில் தாயாரால் ஒப்படைவு செய்யப்பட்ட  பெண் குழந்தை (பிறந்த தேதி - 16.02.2023) மேற்கண்ட தத்துவள மையத்தில் 24.02.2023 அன்று அனுமதிக்கப்பட்டு பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட்டு வந்த நிலையில் 27.02.2023 அன்று வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மேற்கண்ட அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டதை தொடர்ந்து 07.03.2023 அன்று மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து மீண்டும் இல்லம் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

அதனை தொடர்ந்து, 11.03.2023 (குழந்தையின் எடை 2.060 கி.கி) அன்று அதிகாலை 5.58 மணியளவில் வயிற்றுப்போக்கு காரணமாக மீண்டும் மேற்கண்ட அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு 32 நாட்களாக சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் மரபணு சார்ந்த குறைபாடு  காரணமாக, சிகிச்சை பலனின்றி, நேற்று (12.04.2023) இரவு 08.00 மணியளவில் உயிரிழந்தது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News