திருச்சியில் 4 இடங்களில் சாலை மறியல்; 140 பேர் கைதாகி விடுதலை

மாணவி தற்கொலை தொடர்பாக திருச்சியில் 4 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 140 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.

Update: 2022-01-21 05:00 GMT

திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகி விடுதலையானவர்கள்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி லாவண்யா. திருக்காட்டுப்பள்ளியில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்த இவரை கிறிஸ்தவராக மதம் மாற சொல்லி அந்த பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாகவும், மாணவி மதம் மாறாததால் பள்ளி விடுமுறையின் போது வீட்டுக்கு அனுப்பாமல் பள்ளியிலேயே தங்க வைத்து கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் மதமாற்றம் செய்ய முயன்ற பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், மாணவியின் தற்கொலைக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் பா.ஜனதா கட்சியினர், இந்து முன்னணி, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்பினர் நேற்று இரவு பல்வேறு இடங்களில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அதுபோல் திருச்சியில் பழைய பால்பண்ணை அருகிலும், திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள பழைய திருவள்ளுவர் பஸ் நிலைய பகுதியிலும், ஸ்ரீரங்கம் பழைய பஸ் நிலையம் அருகிலும், சத்திரம் பஸ் நிலையம் பகுதியிலும் பாரதீய ஜனதா கட்சியினர் மற்றும் இந்து அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, இறந்த மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டியும், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டியும் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா மாவட்ட தலைவர் ராஜசேகரன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சுரேஷ், விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் சீனிவாசன்  உள்பட 140 பேரை கைது செய்து அருகில் உள்ள மண்டபங்களில் தங்க வைத்தனர். பின்னர் இரவு அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News