திருச்சி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதும் 13,613 பேர்
திருச்சி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. தொகுதி 1 தேர்வினை 13,613 பேர் எழுத உள்ளனர்.;
அரசு பணி என்பது பாதுகாப்பான என்பதால் அதனை அடைவதற்கு எப்போதுமே கடுமையான போட்டி நிலவுவது இயற்கையான ஒன்று தான். தமிழக அரசு பணிகளில் சேருவதற்கான எழுத்து தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. கிளார்க் முதல் துணை ஆட்சியர் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு குறிப்பிட்ட தேதிகளில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாயைத்தால் தொகுதி-1ல் அடங்கிய பல்வேறு பதவிக்கான போட்டி தேர்வு வருகின்ற 19.11.2022 சனிக்கிழமை (முற்பகல்) 9.30 முதல் 12.30 வரை தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் 44 தேர்வு மையங்களில் 13,613 நபர்கள் இத்தேர்வினை எழுதவுள்ளனர். இப்பணிகளுக்கென 44 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இப்போட்டித் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள 14 இயங்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவிற்கு துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு அலுவலர் ஆயுதம் ஏந்திய ஒரு காவலர் ஆகியோர் இயங்குவர். தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு செய்ய துணை ஆட்சியர் நிலையில் 5 பறக்கும்படை (பிளையிங் ஸ்குவார்டு) அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் தேர்வை கண்காணிக்கும் பொருட்டு 44 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெறுவதை பதிவு செய்திட வீடியோகிராபர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அனைத்து தேர்வு மையங்களிலும் காவல்துறை மூலம் பாதுகாப்பு பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வாளர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. தேர்வு எழுத வரும் தேர்வாளர்கள் செல்லிடை பேசி உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனங்களும் தேர்வு மையங்களுக்கு எடுத்து வர அனுமதி இல்லை என்றும் கோவிட்-19 நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தேர்வாணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வாணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி அனைத்து தேர்வர்களை தேர்வினை எழுத வரவேண்டும். தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து வரக்கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்து உள்ளார்.