திருச்சி மாவட்ட குறைதீர் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 1,224 மனுக்கள்
திருச்சி மாவட்ட பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 1,224 மனுக்கள் பெறப்பட்டது.;
திருச்சியில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று 09.10.2023 நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், இதரச் சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, அரசின் நலத் திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 1224 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் உத்தரவிட்டார்.
இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு அளித்த அரை மணிநேரத்தில் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயாருக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் விலையில்லாமோட்டார் பொருத்திய தையல் இயந்திரத்தினையும்,மாற்றுத்திறனாளி மூன்று சக்கர வாகனம் வேண்டி விண்ணப்பித்ததை தொடர்ந்து உடனடியாக அவருக்கு மூன்று சக்கர சைக்கிளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் வழங்கினார்.
மேலும் மாற்றுத்திறனாளிகளின் நலத்துறை சார்பில் நான்கு நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் சட்டப்பூர்வமான வரையறுக்கப்பட்ட பாதுகாவலர் நியமனச் சான்றினை மாவட்ட ஆட்சித்தலைவர் பயனாளிக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நிலம்),மாவட்டதுணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் செல்வம், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் அருள்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் தவச்செல்வம்,மாவட்ட வழங்கல் அலுவலர் மீனாட்சி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன்உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.