திருச்சியில் ஒரே நாளில் குவிந்த 1000 டன் தீபாவளி கழிவு பொருள் குப்பை
திருச்சியில் ஒரே நாளில் குவிந்த 1000 டன் தீபாவளி கழிவு பொருள் குப்பைகளை மாநகராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தினர்.
திருச்சி மாநகராட்சியில் கோ. அபிஷேகபுரம், அரியமங்கலம், ஸ்ரீரங்கம், பொன்மலை, திருவெறும்பூர் என 5 மண்டலங்கள் உள்ளன.இங்கு சுமார் இரண்டரை லட்சம் குடியிருப்புகள் உள்ளன. இது தவிர மருத்துவமனைகள் மற்றும் ஓட்டல்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்களும் அதிக அளவில் உள்ளன.இதன் மூலம் நாளொன்றுக்குக்கு சுமார் 450 டன் முதல் 500 டன் குப்பைகள் தூய்மைப் பணியாளர்கள் மூலம்சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டதால் மாநகரின் அனைத்து தெருக்களிலும் மேலும் 100 டன் பட்டாசு கழிவுகள், புத்தாடை வாங்கிய பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியது. திருச்சி என்.எஸ்.பி. ரோடு, பெரிய கடைவீதி, சத்திரம் சத்திரம் பகுதிகளில் அதிக அளவு குப்பைகள் தேங்கி கிடந்தன.
இதனை அப்புறப்படுத்தும் பணியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் மாநகரம் முழுவதும் இரண்டாயிரத்துக்கும்மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மாநகராட்சிஅரியமங்கலம் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
திருச்சி நகரின் அனைத்து பகுதிகளிலும் இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் ஆயிரம் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு உள்ளது. ஒரே நாளில் இவ்வளவு குப்பைகள் மலை போல் குவிந்ததற்கு காரணம் தீபாவளி பண்டிகை தான். பெரிய கடைவீதி, சின்ன கடைவீதி, என்எஸ்பி சாலை, மேலரண் சாலை போன்ற கடைவீதியில் சாலையோரம் வியாபாரம் செய்த வியாபாரிகள் பிளாஸ்டிக் கழிவுகளை அப்படியே போட்டுவிட்டு சென்றனர். மேலும் பட்டாசு கழிவுகளும் அதிக அளவில் சேர்ந்ததால் தான் குப்பைகள் அதிக அளவில் தேங்கியதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.