திருச்சி பள்ளியில் சாமியானா சரிந்து விழுந்ததில் 10 மாணவர்கள் காயம்
திருச்சி பள்ளியில் சாமியானா பந்தல் சரிந்து விழுந்ததில் 10 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் காயம் அடைந்தனர்.;
பள்ளி வளாகத்தில் சாமியானா பந்தல் சரிந்து விழுந்து கிடந்த காட்சி.
திருச்சியில் சாமியானா பந்தல் சரிந்து விழுந்தது. இதில் பள்ளி மாணவர்கள் 10 பேரும் ஆசிரியர் ஒருவரும் காயம் அடைந்தனர்.
திருச்சி கருமண்டபம் பகுதியில் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இன்று காலை கடந்த கல்வியாண்டில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது,
வெயில் கொடுமை காரணமாக விழா நடைபெற்ற இடத்தில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது .மாணவர்களை பாராட்டி பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பேசிக் கொண்டு இருந்தார்கள். மாணவர்கள் அனைவரும் பந்தல் வளாகத்தில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் திடீரென சூறாவளி காற்று வீசியது. அந்த காற்றில் சாமியானா பந்தல் திடீரென சரிந்து விழுந்தது. இதில் மாணவர்கள் 10 பேர் லேசான காயமடைந்தனர். மணிகண்டன் என்ற ஆசிரியரும் காயம் அடைந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காயமடைந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உடனடியாக தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட பெற்றோர்கள் உடனடியாக பள்ளியை நோக்கி ஓடி வந்தார்கள். அவர்களை பள்ளி நிர்வாகத்தினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். சிலர் தங்களது பிள்ளைகளை கையோடு அழைத்துச்சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் திருச்சி அமர்வு நீதிமன்ற போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். போலீஸ் அனுமதி பெற்று இந்த விழா நடத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.