திருச்சியில் கீழே கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த தோழிகள்

திருச்சியில், மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் தவறவிட்ட ரூ.50 ஆயிரத்தை உரியவரிடம் கொடுக்க போலீசில் தோழிகள் ஒப்படைத்தனர்.

Update: 2021-11-02 05:15 GMT

திருச்சியில் கீழே கிடந்த பணம் ரூ.50 ஆயிரத்தை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த தோழிகள்

திருச்சி கருமண்டபம் ஜெ.ஆர்.எஸ்.நகரை சேர்ந்தவர் மதுஷா(வயது 24). இவர் தனது தோழிகளான சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த ஷமீனாபானு, மண்ணச்சநல்லூரை சேர்ந்த சரண்யா ஆகியோருடன் நேற்று கருமண்டபம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த நேரம், திருச்சி மத்திய பஸ் நிலையத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வேகமாக சென்றார்.

அப்போது, அரிஸ்டோ ரவுண்டானா அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து 500 ரூபாய் பணக்கட்டு கீழே விழுந்தது. இதை பார்த்த தோழிகள் 3 பேரும் அந்த வாலிபரை சத்தம் போட்டு அழைத்துள்ளனர். ஆனால் அவர் நிற்காமல் சென்று விட்டார். இதை தொடர்ந்து அந்த பணக்கட்டை எடுத்துக் கொண்டு, கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.

அங்கு அந்த பணத்தை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியனிடம் ஒப்படைத்து, அதை உரியவரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டனர். தோழிகள் நினைத்திருந்தால் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு சென்று செலவு செய்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் அவர்கள் நேராக போலீசில் ஒப்படைத்ததை கண்டோன்மெண்ட் போலீசார் பாராட்டினர். இதுபற்றி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் கூறும்போது, அந்த பெண்கள் ஒப்படைத்த ரூ.50 ஆயிரம்  போலீஸ் நிலையத்தில் இருக்கும்.

பணத்தை தவற விட்டவர்கள் வந்து தகுந்த ஆதாரங்களை காண்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம். தவறும் பட்சத்தில், அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News