திருச்சி: துறையூர் அருகே சாராயம், மதுபானம் விற்ற 5 பேர் பிடிபட்டனர்!
திருச்சி மாவட்டடம் துறையூர் அருகே கள்ளச்சாராயம், மதுபானம் விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூர், உப்பிலியபுரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து துறையூர் காவல்துறை ஆய்வாளர் விதுன்குமார், மற்றும் சப்இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது கள்ளச் சாராயம் மற்றும் மது பாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த நாகநல்லூர் காட்டுக்கொட்டகையை சேர்ந்த நடேசன், நெட்டவேலம்பட்டியை சேர்ந்த மணி, சுப்ரமணி, சதீஸ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கள்ளத்தனமாக மது பாட்டில்கள் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த கொப்பம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 350 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு அதனை கொட்டி அழிக்கப் பட்டது. 13 லிட்டர் சாராயம், மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டார் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.