துறையூர்- பச்சமலை சாலையில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு

துறையூர்- பச்சமலை சாலையில் 6 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-11-27 09:45 GMT

சாலைகளில் சரிந்து கிடந்த மண் குவியல், கற்கள் உள்ளிட்டவை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பச்சமலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று அதிக மழை பெய்ததால் துறையூரில் இருந்து பச்சமலை செல்லும் சாலையில் 6 இடங்களில் பலத்த மண்சரிவு ஏற்பட்டது. இதனால் துறையூரில் இருந்து பச்சமலை செல்லும் பஸ்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதோடு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த சாலைகளில் சரிந்து கிடந்த மண் குவியல், கற்கள் உள்ளிட்டவை பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றிய பின் பஸ் போக்குவரத்து தொடங்கியது. இருப்பினும் வாகன ஓட்டிகள் வாகனங்களில் சென்றபோது எப்போது மண்சரிவு ஏற்படுமோ என்ற அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது. வனத்துறையினர் உடனடியாக சாலையை சீரமைத்து புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்று பச்சமலை மலை வாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் உப்பிலியபுரத்தில் இருந்து சோபனபுரம் வழியாக டாப்செங்காட்டுப்பட்டி செல்லும் வனத்துறையினருக்கு சொந்தமான பிரதான சாலையில் நேற்று முன்தினம் இரவு மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொக்லைன் மூலம் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News