பிரேத பரிசோதனைக்கு பணம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஆயுத படைக்கு மாற்றம்
இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய பணம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதபடைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மணவறை அலங்கரிக்கும் பணிக்கு திருவானைக்காவல் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த காந்தி என்பவரது மகன் சரத் (வயது 24) என்பவர், தனது குழுவினரோடு பொருட்களை ஒரு வாகனத்தில் எடுத்துக் கொண்டு சென்றார்.
அப்போது நீளமான இரும்புக் குழாயை தூக்கிச் சென்ற போது உயரழுத்த மின்கம்பியில் அந்த இரும்பு குழாய் மோதியதால் அதில் மின்சாரம் பாய்ந்த்து. இதில் சரத் தூக்கி எறியப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த துறையூர் சப்- இன்ஸ்பெக்டர் சேகர் சரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வந்தார்.
இந்நிலையில் சரத்தின் உறவினர்களிடம் பிரேத பரிசோதனையை முடித்து தர சப்-இன்ஸ்பெக்டர் சேகர் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ரூ.5 ஆயிரம் பணம் பெற்றுக்கொண்டு இன்னும் கூடுதலாக பணம் கேட்டதாக கூறி, இது குறித்து சரத்தின் உறவினர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கொடுத்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர்சேகரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.