துறையூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து மாணவர் உயிரிழப்பு
துறையூர் அருகே மீன்பிடித்தபோது, கிணற்றுக்குள் தவறி விழுந்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.;
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த செங்காட்டுப்பட்டி கரைமேடு பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் திலக் (வயது 11). இவன் செங்காட்டுப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் மாலை திலக் செங்காட்டுப்பட்டியில் உள்ள பழ மலை கோவில் செல்லும் வழியில் திருநாவுக்கரசு என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் மீன்பிடிக்க சென்றான்.
சுமார் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த போது, எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். இதை யாரும் கவனிக்காததால் அவன் கிணற்றுக்குள் மூழ்கினான். இந்த நிலையில் திலக் வீடு திரும்பாததை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடி வந்தபோது, அவன் கிணற்றுக்குள் விழுந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து துறையூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நிலைய அலுவலர் அறிவழகன் தலைமையில், அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி சுமார் 8 மணி நேர போராட்டத்துக்கு பின் அதிகாலை 2 மணி அளவில் திலக்கை கிணற்றில் இருந்து பிணமாக மீட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் துறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமரகவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.