அரசு பள்ளி மைதானத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரை மாற்ற கோரிக்கை
துறையூர் அடுத்த கோவிந்தபுரம் அரசுப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரை உடனடியாக அகற்ற மாணவர்கள் கோரிக்கை.;
திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த கோவிந்தபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இதில் ஆங்கில வழிக் கல்வியும், கராத்தே, கம்ப்யூட்டர், இசை , எழுத்துப் பயிற்சி உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடைபெறும். மேலும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உள்ளதால், தனியார் பள்ளிகளில் இருந்து பலர் தங்கள் குழந்தைகளை , கோவிந்தபுரம் அரசு பள்ளியில் சேர்த்து வருகின்றனர். 14 மாணவர்கள் மட்டுமே இருந்த இப்பள்ளியில் தற்போது 168 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் உயர் அழுத்த மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) உள்ளது. இந்த மின்மாற்றியை மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வேறு இடத்திற்கு மாற்றிடக் கோரி பள்ளி நிர்வாகம், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மின்வாரிய அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார கல்வி அலுவலர்களுக்கு கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக நேரில் மனு அளித்தும் டிரான்பார்மர் அகற்றப்படாமல் உள்ளது.
பள்ளிகளைத் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வரும் வேளையில், பள்ளிகள் திறக்கும் முன்பாக, கோவிந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள உயர் அழுத்த மின் மாற்றியை உடனடியாக அகற்றிட வேண்டும் என மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் , சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்னனர்.