துறையூரில் பூட்டியிருந்த வீட்டில் ரூ.80 ஆயிரம் திருட்டு; மர்ம நபர்கள் கைவரிசை
துறையூரில் பூட்டியிருந்த வீட்டில் ரூ.80 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூர் , மதுராபுரி கத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சக்கரை என்பவரது மகன் மனோகரன் (58) . இவர், பாத்திரங்கள் வாடகை விடும் கடையை நடத்தி வருகிறார். கடந்த 17-ம் தேதி உடல்நிலை சரியில்லாத தனது மகளைப் பார்ப்பதற்காக பெங்களூருவுக்கு சென்றுள்ளார்.
பின்னர், இன்று (20-ந் தேதி) காலை ஊர் திரும்பிய மனோகரன் , வீட்டிற்கு வந்து பார்த்த போது மர்ம நபர்களால் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பூஜை அறையில் வைத்திருந்த ரூ.80 ஆயிரத்தை திருடிச் சென்றதைக் தெரியவந்தது.
பணத்தை திருடிய மர்ம ஆசாமிகள் பூஜை அறை அருகில் இருந்த மற்றொரு அறையை திறக்காததால் அதனுள் இருந்த சுமார் ஏழரை பவுன் நகைகள் தப்பியது. மேலும் இதுபற்றி துறையூர் காவல் நிலையத்தில் மனோகரன் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த முசிறி டிஎஸ்பி அருள்மொழி , துறையூர் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் , சப் இன்ஸ்பெக்டர் சேகர், மாவட்ட தனிப்படைப்பிரிவு எஸ்ஐ கலைச்செல்வன் , ஏட்டுக்கள் கோவிந்தராஜ் , ஆனந்த் , செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.