துறையூர் அ.தி.மு.க. வேட்பாளர் கொரோனா விழிப்புணர்வுடன் வாக்கு சேகரிப்பு
துறையூர் அ.தி.மு.க. வேட்பாளர் கொரோனா விழிப்புணர்வுடன் வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களுடன் வாக்கு சேகரித்தார்.;
திருச்சி மாவட்டத்தில் துறையூர் ஊராட்சி ஒன்றியம் 13-வது வார்டு,வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் 6-வது வார்டு, மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் 10-வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்குப்பதிவு அக்டோபர் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் நடத்தப்படுவதால் அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் துறையூர் 13-வது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அபிராமி சேகர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான பரஞ்சோதி தலைமையில் வாக்கு சேகரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.பொதுவாக வேட்பாளர்கள் தான் வெற்றிபெற்றால் வார்டில் என்ன திட்டங்களை நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளிப்பது வழக்கம். அபிராமி சேகர் அதேபோல வாக்குறுதிகளை அளித்துள்ள நிலையில் தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரத்தையும் வாக்கு சேகரிப்பின் போது இடையிடையே பயன்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் அவர் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வினியோகிக்கும் துண்டு பிரசுரங்களில் அந்த நோட்டீஸில் உயிரைக் காப்பாற்ற மாஸ்க் போடுங்க ... ஊரை காப்பாற்ற தனது சின்னமான இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.