துறையூர் பகுதியில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்ற 3 பேர் கைது
துறையூர் பகுதியில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் சட்டத்துக்கு விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் திருச்சி எஸ்பி., சுஜித்குமார் உத்தரவின் பேரில் எஸ்ஐ மோகன்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் துறையூரில் ரோந்து சென்றனர்.
அப்போது துறையூரில் உள்ள சினிமா தியேட்டர் அருகேயுள்ள பாரில் வேலை செய்த சேனப்பநல்லூரைச் சேர்ந்த சின்னமணி (வயது 33), வெங்கடேசபுரம் செல்லும் சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் மது விற்றது தெரிந்தது.
இதேபோல் அடிவாரம் சொரத்தூர் சாலையில் செங்கல் சூளை அருகே கோட்டாத்தூரைச் சேர்ந்த கோபி(44)யும், கீரம்பூரைச் சேர்ந்த அருள்குமாரும்(27) மது விற்றது தெரிய வந்தது.
இதையடுத்து 3 பேரையும் கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடமிருந்து 22 பீர் பாட்டில்கள், 51 குவார்ட்டர் மது பாட்டில்கள் மற்றும் ரூ.5,160 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து துறையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.