திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள முருங்கப்பட்டி கிராமத்தில் வெற்றிவேல் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் என்ற தனியார் வெடிமருந்து தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வந்தது. கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி வெடி மருந்து தயாரிப்பு வளாகத்தில் உள்ள ஒரு அரங்கில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடம் தரை மட்டமானதுடன், அங்கு பணியாற்றிய பலர் இடிபாட்டில் சிக்கியும், உடல் சிதறியும் பலியாகினர். இதில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அரசு அறிவித்து இருந்தது. இந்த வெடி விபத்து குறித்து வெடிபொருள் தயாரிப்பு நிறுவன உரிமையாளரான விஜயக்கண்ணன், மேலாளர்கள் பிரகாசம், ராஜகோபால், பாதுகாப்புப் பிரிவு மேலாளர் ஆனந்தன் உட்பட 4 பேர் மீது 304(2), இந்திய வெடிபொருள் சட்டம் 9 (1)ஏ, 9 (பி)(1)(ஏ), வெடிபொருள் சட்டம் 3, 4(பி), 5 ஆகிய பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு வழக்கு சம்மந்தமான அனைத்து ஆவணங்களும் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 5-வருடங்களாக நடந்து வந்த வழக்கு விசாரணையில் சிபிசிடி போலீசார் இன்று வெடி விபத்து சம்பந்தமாக 4 பேரையும் அழைத்து வந்தனர். திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி செல்வம் முன்பு விசாரணை நடந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் ராஜேந்தின் மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர் மனோகரன் ஆகியோர் வாதாடினார். அதனைத் தொடர்ந்து இன்று நடந்த வழக்கு விசாரணை முடிவில் வருகிற 23.2.2021 அன்று இந்த வழக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் ஆஜராகும் படி நிதிபதி உத்தர விட்டார்.