சாலை வசதியின்றி பேருந்து நிறுத்தம்: பச்சமலை பழங்குடியின மக்கள் அவதி
சாலை வசதியின்றி பேருந்து நிறுத்தம் . பச்சமலை மக்கள் அவதி, பாதியில் நிற்கும் சாலைப்பணியை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை.
திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ,பச்சமலை வண்ணாடு ஊராட்சியைச் சேர்ந்த பாளையம் கிராம பொதுமக்கள் பேருந்து வசதி வேண்டி கோரிக்கை வைத்துள்ளனர்.
துறையூர் பேருந்து நிலையத்திலிருந்து பெருமாள்மலை அடிவாரம் , கீரம்பூர், செங்காட்டுப்பட்டி,மணலோடை, நாகூர் வழியாக பாளையம் வரை சுமார் 45 கிமீ பயணத்திற்கு தினசரி இருமுறை அரசுப் பேருந்து சேவை இயக்கப்படுகிறது. சமீப காலமாக ,இத்தடத்தில் வரும் பேருந்துகள் நாகூரிலேயே நிறுத்தப்படுவதாகவும் , அங்கிருந்து 2 கிமீ நடைவழியாக பாளையம் அடைவதாக கிராம மக்கள் புகாரெழுப்பியுள்ளனர். மேலும் தங்களது விளை பொருட்களை சந்தைப்படுத்தவும், தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கவும் ,துறையூர் பயணத்தை நம்பி இருக்கும் பாளைய கிராம மக்கள், பெண்கள், குழந்தைகள் முதல் அனைவரும் 2 கிமீ தொலைவை நடந்து சென்று பேருந்தில் பயணம் செய்யும் அவல நிலையில் உள்ளனர்.
வெகு நாட்களாக பராமரிப்பு பணிகளின்றி இருந்த நாகூர்−பாளையம் சாலை, சமீபத்தில் புணரமைப்பு பணிகளுக்காக பணிகள் தொடங்கப்பட்டன. சாலைப்பயனீட்டாளர்களும், பொதுமக்களும் பலமுறை புகாரெழுப்பியதன் பேரில், தொடங்கப்பட்ட சாலை பணிகள் நிறைவடையாமலே பாதியில் நிறுத்தப்பட்டதன் காரணமாக ,சாலையில் ஜல்லிகளும், மண் குவியல்களும் இருப்பதால் பேருந்தை பாளையம் வரை இயக்கும் சூழ்நிலை சாதகமாக இல்லை என ,சாலையை ஆய்வு செய்த துறையூர் அரசு போக்குவரத்து பணிமனை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை புணரமைத்து, பேருந்து இயக்கத்திற்கு வழிவகை செய்ய, சாலை பயனீட்டாளர்களும், பாளையம் கிராம மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.