விசாரணைக்கு பயந்து எலிபேஸ்ட் சாப்பிட்ட இளைஞர் போலீஸ் நிலையத்தில் மயக்கம்
விசாரணைக்கு பயந்து எலி பேஸ்ட் சாப்பிட்ட இளைஞர் காவல் நிலையத்தில் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் அஸ்தம்பட்டி சுந்தர கணபதி கோவில் அருண் நகரை சேர்ந்தவர் பரணிதரன் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மகன் கோகுல் (வயது 19) இவர் நவல்பட்டு காவல் நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் கடந்த ஆண்டு இரண்டு பைக் திருட்டு வழக்குகள் 4 வீடுகளில் வீடு புகுந்து 34 பவுன் கொள்ளையடித்த வழக்கில் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதற்குரிய கண்காணிப்பு கேமரா பதிவுகளும் உள்ளதாம்.
மேலும் கோகுல் மீது சேலம் கன்னங்குறிச்சியில் ஒரு திருட்டு வழக்கும் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் இரண்டு திருட்டு வழக்குகள் என மொத்தம் 9 வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கோகுல் குண்டூர் எம்.ஐ.டி. அருகே உள்ள அய்யனார் கோவில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, வேலைக்கு போவதாக நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் கோகுலை விசாரணைக்காக காவல் நிலையம் வருமாறு போனில் அழைத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் குமாரமங்கலம், வடுக பட்டியலில் இருக்கும் அவரது அண்ணன் கார்த்திகேயன் என்பவரை துணைக்கு அழைத்துக்கொண்டு நவல்பட்டு காவல் நிலையத்திற்கு நேற்று வந்துள்ளார்.
அப்படி வந்த கோகுல் காவல் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத நவல்பட்டு போலீசார் மற்றும் கார்த்திகேயன் உடனடியாக கோகுல் முகத்தில் தண்ணீர் தெளித்து விசாரித்த போது, கோகுல் போலீசார் விசாரணைக்கு பயந்து காவல் நிலையத்திற்கு வரும் போதே எலி பேஸ்ட் சாப்பிட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக கார்த்திகேயன் நவல்பட்டு போலீசார் உதவியுடன் தனது தம்பி கோகுலை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.