தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.;
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 61-வது வார்டு காட்டூர் காவிரி நகரில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவுக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நியாயவிலைக்கடையை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். பின்னர் மரக்கன்றுகளை நட்டினார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-
பள்ளிகள் திறக்கப்பட்ட பின்பு மாணவர்கள் வருகை, கொரோனா உள்ளிட்டவை குறித்து கண்காணித்து வருகிறோம். அது குறித்து வரும் 15-ஆம் தேதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பின்பு தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பது குறித்து தமிழக முதல்வர் முடிவெடுப்பார்.
நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்தில் உள்ளனர். நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது
இவ்வறு அவர் கூறினார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. சேகரன் உள்பட முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.