திருச்சியில் வருமானம் இல்லாததால் ரயிலில் பாய்ந்து வெல்டர் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி பொன்மலை மஞ்சத்திடல் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து உடலை கைப்பற்றி அவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் திருச்சி கே.கே.நகர், வயர்லெஸ் ரோடு, அமலாபுரம் காலனியை சேர்ந்த ஜான் ரைமன்கான்(70) என்பது தெரியவந்தது.
இவருக்கு சந்தியா(60) என்ற மனைவியும், 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தனியார் தொழிற்சாலையில் வெல்டர் ஆக பணிபுரிந்து வந்த இவருக்கு, கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக வருமானம் இல்லை. தொடர்ந்து குடும்பத்தில் பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜான் ரைமன் கான் நேற்று மாலை திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற ரயில்வே ஊழியர்களுக்கான சிறப்பு ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.