திருச்சியில் துப்புரவு தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
திருச்சியில் பரிசு தொகையை கொடுக்காமல் துப்புரவு தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி பொன்மலை ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 53), மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழிலாளியான இவர் அரியமங்கலம் அம்பிகாபுரம் நேதாஜி தெருவை சேர்ந்த ஆசைத்தம்பி (52) என்பவரிடம் லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். வாங்கிய அந்த லாட்டரி சீட்டுக்கு பரிசு பணம் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த பணத்தை ஆசைத்தம்பி கொடுக்க மறுத்துள்ளார். மேலும் அவரும், அவரது நண்பரான மேலகல்கண்டார்கோட்டை பரமசிவம் தெருவை சேர்ந்த ஹரிஹரன் (வயது 34) ஆகியோர் சேர்ந்து கிருஷ்ண குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, கிருஷ்ண குமார் பொன்மலை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசைத் தம்பி, ஹரிஹரனை கைது செய்தனர்.