திருச்சி: துவாக்குடி நகராட்சி தலைவராக காயாம்பு போட்டியின்றி தேர்வு
திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி தலைவராக திமுக வை சேர்ந்த காயாம்பு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.;
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சி தேர்தலில் பதவியேற்றுக்கொண்ட கவுன்சிலர்கள் வாக்களிக்கும் மறைமுக தேர்தல் இன்று துவாக்குடி நகராட்சியில் நடைபெற்றது. 21 கவுன்சிலர்கள் கொண்ட துவாக்குடி நகராட்சியில் அ.தி.மு.க. ஒரு உறுப்பினர் தவிர 20 பேர் கலந்து கொண்டனர். இதில் 12-வது வார்டு கவுன்சிலரான காயாம்பு காலை 9.45 மணிக்கு நகராட்சி தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டார். புதிய தலைவராக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள காயாம்பு துவாக்குடி நகர தி.மு.க. செயலாளராகவும், 12-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராகவும் உள்ளார்.
இவர் பதவி ஏற்றபின் செய்தியாளர்களிடம் கூறும்போது
துவாக்குடி நகராட்சியில் கடந்த 1996 முதல் 2001 வரை துணைத் தலைவராகவும், 2001 முதல் 2016 வரை தலைவராகவும் பதவி வகித்தபோது பல கோடி மதிப்பீட்டில் எண்ணற்ற மக்கள்நல வளர்ச்சித் திட்டப்பணிகளைச் செய்துள்ளேன். இதில் முக்கியமானது, எனது தீவிர முயற்சியால் தேசிய தொழில்நுட்பக்கழக கல்லூரி (என்ஐடி) நிர்வாகத்திடம் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு சுமார் 3 ஏக்கர் இடத்தைப் பெற்று ஆரம்ப சுகாதார நிலையத்தைக் கொண்டு வந்தேன். தற்போது இது துவாக்குடி நகராட்சிக்குட்பட்ட மக்கள் மட்டுமல்லாமல் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளின் மக்களும் மருத்துவ வசதிகளைப் பெறும் பயனுறும் தாலுகா அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டு செயல்படுகிறது. முன்னாள் முதல்வர் கலைஞரால் கொண்டு வரப்பட்ட கூட்டுக்குடிநீர்த்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்தி பெல்நகரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், 15-வது வார்டில் பெல் தொழிற்சாலை நிர்வாகத்தின் சிஎஸ்ஆர்., திட்ட நிதி பங்களிப்புடன் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியும் அமைத்து நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளின் மக்களுக்கும் குடிநீர் கிடைக்க செய்தேன். அன்றைய உள்ளாட்சித்துறை அமைச்சரும், இன்றைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் கே.என்.நேருவின் முயற்சிகளால் நகராட்சிக்குச் சொந்தமான அலுவலக கட்டிடம் அமைத்துத் கொடுத்தேன்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சமுதாய கூடங்கள், சீரணி அரங்கங்கள், அங்கன்வாடி கட்டிடங்கள், குடிநீர் வசதி செய்துதரப்பட்டுள்ளது. தற்போது 12- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். முதலில் சிட்கோ நிர்வாகத்திடமிருந்து பொது உபயோகத்திற்கான இடங்களை நகராட்சிக்கென பெற்று தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன். வ.உ.சி நகரில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேல்நிலைநீர்த்தேக்கதொட்டியும், தனியார் பங்களிப்புடன் நவீன நூலகம், நவீன அங்கன்வாடி மையமும் அமைத்து தருவேன்.
துவாக்குடியில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனை மேம்படுத்தப்படும். துவாக்குடி தலைமை அரசு மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உபகரணங்களை அரசிடமிருந்து பெற்றுத் தருவேன். நகராட்சியின் பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் பட்டா கிடைக்க ஆவண செய்வேன் என்றார்.