திருச்சி சர்வீஸ் சாலை மீட்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
திருச்சி சர்வீஸ் சாலை மீட்பு கூட்டமைப்பினர் கலெக்டர்அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.;
திருச்சியில் சர்வீஸ் சாலை மீட்பு கூட்டமைப்பு சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
திருச்சி பழைய பால்பண்ணை ரவுண்டானா முதல் துவாக்குடி வரை 14 கிலோமீட்டர் நீளத்திற்கு சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்பது திருச்சி மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி மற்றும் உயிர்பலி வாங்கும் விபத்துக்களை தடுப்பதற்காக இந்த கோரிக்கையை மக்கள் பல ஆண்டுகளாக வைத்துள்ளனர். ஆனால் சர்வீஸ் சாலைக்காக நிலம் கையகப் படுத்தப்பட்ட நிலையில் பின்னர் அந்த பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சர்வீஸ் ரோடு மீட்பு கூட்டமைப்பின் சார்பில் அனைத்து நல சங்கங்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் சக்திவேல், நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் சர்வீஸ் ரோடு பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி நல சங்கங்களை சேர்ந்த அனைவரும் தமிழக முதல்வருக்கு தனித்தனியாக பதிவு தபாலில் அதிக அளவில் மனு அனுப்புவது, இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற மே இரண்டாம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பெருந்திறள் ஆர்ப்பாட்டம் நடத்துவது ,மத்திய மாநில அரசுகள் சர்வீஸ் சாலையை விரைந்து முடிக்க வேண்டும் என அரசாணை பிறப்பித்தும் 15 -10 -2019 அன்று மதுரை ஐகோர்ட்டு கிளை சர்வீஸ் சாலை பணியை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு இந்த பணி இதுவரை முடிக்கப் படாமல் இருப்பதற்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து அந்த வழக்கை துரிதப்படுத்துவது, திருச்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் சர்வீஸ் சாலை பணியை விரைந்து முடிக்க முதல்வரிடம் சந்தித்து வலியுறுத்த கேட்டுக் கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.