திருச்சி என்.ஐ.டி. விடுதியில் வங்காள தேச மாணவர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி என்.ஐ.டி. விடுதியில் வங்காள தேச மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-01-09 05:26 GMT

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் தேசிய தொழில்நுட்பக் கல்லூரி (என்.ஐ.டி.) உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த கல்லூரியில் வங்காளதேசத்தை சேர்ந்த சௌவுரவ்சென் (வயது 24) என்பவர் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். தற்போது, இக்கல்லூரியில் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை எழுதுவதற்காக கடந்த வாரம் சௌவுரவ் சென் கல்லூரிக்கு வந்து இருந்தார்.

இவர் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று தேர்வு எழுதி முடித்தவுடன் தனது விடுதி அறைக்கு வந்தார். பின்னர் அவர் கதவை உள்பக்கமாக தாழிட்டு கொண்டதாக தெரிகிறது.

இதற்கிடையில் சக மாணவர்கள் கதவை தட்டியும் நீண்ட நேரம் திறக்கப்படவில்லை. இது குறித்து கல்லூரி பேராசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் மாணவர் சௌவுரவ் சென் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து துவாக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகே உள்ள துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் மாணவர் சௌவுரவ் சென், தேர்வை சரிவர எழுதாததால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. எனினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News