திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பெயர் நாளை முதல் மாற்றம்

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பெயர் நாளை முதல் மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.;

Update: 2021-09-30 05:15 GMT

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி(படைக்கல) தொழிற்சாலை இது நாள் வரை கொல்கத்தாவில் இயங்கி வந்த ஓ.எப்.டி. எனும் ஆயுத தொழிற்சாலை வாரியத்தின் கீழ் இயங்கி வந்தது. அதே போல் அருகில் உள்ள எச்.ஏ.பி.பி. தொழிற் சாலையும் இதன் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் நேரடியாக இயங்கி வந்த தொழிற்சாலைகள் தற்போது கார்ப்பரேஷன்களாக மாற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து இந்திய ராணுவ அமைச்சகம் ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தை கலைத்து விட்டது. இந்தியா முழுதும் இயங்கி வந்த நாற்பத்தி ஒரு தொழிற்சாலைகளுக்கு அதன் உற்பத்தி தன்மைக்கு ஏற்ப ஏழு அலகுகளாக பிரிக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளது.

அதன்படி திருச்சியில் இதுவரை ஆர்டினன்ஸ் ஃபேக்டரி திருச்சி( ஓ .எப். டி ) என்று இயங்கி வந்த தொழிற்சாலை அக்டோபர் 1-ஆம் தேதி முதல் மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் இந்தியா லிமிடெட் அட்வான்ஸ்டு வெப்பன்ஸ் அண்ட் எக்யூப்மென்ட்ஸ் இந்தியா லிமிடெட் ( ஏ.டபிள்யூ.இ.ஐ.எல்) என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

1966-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஓ.எப்.டி.  தொழிற்சாலை கடந்த 56 ஆண்டுகளாக ஓ. எப்.டி. என்று மக்கள் மத்தியில் அழைக்கப்பட்ட பெயர் நாளை முதல் ஏ.டபிள்யு.இ.ஐ.எல். என்று அழைக்கப்பட உள்ளது. அதேபோல் எச். ஏ. பி. பி. எனும் தொழிற்சாலை அன்மையில் எச்.இ.பி.எப். என்று மாற்றம் பெற்றது. இனி இது எம். ஐ. எல். என்று அழைக்கப்பட உள்ளது.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக அழைக்கப்பட்ட பெயர்கள் திடீர் மாற்றம் பெற்று உள்ளதால் இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது நிறுவனத்தின் தொழிற்சாலைகள் பெயரை வெளியே சொல்வதில் குழப்பம் மற்றும் தடுமாற்றம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அது மட்டுமின்றி இந்த தொழிற்சாலைகளை அஞ்சல் பெயர்களாக பயன்படுத்தி வந்த அண்டை கிராமங்களான நவல்பட்டு, புதுத்தெரு, சோழமாதேவி, பர்மா காலனி, சூரியூர், காந்தலூர், இலந்தை பட்டி, பூலாங்குடி, பாரத் நகர் மற்றும் இதன் விரிவாக்க பகுதியான சுமார் 20 ஊர்கள் இனி அஞ்சல் பெயர்களை மாற்றும் சூழல் உருவாகி உள்ளது.

இதனால் பொதுமக்கள் அஞ்சல் பெயர்கள் எழுதும் பொழுது நிறைய குழப்பங்களும் தவறுகளும் நடக்க வாய்ப்பு உள்ளது என்று பொதுநல ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர். இதற்கு துப்பாக்கி(படைக்கல) தொழிற்சாலை மற்றும் எச்.ஏ.பி.பி. தொழிற்சாலைகளில் இயங்கி வரும் போஸ்ட் ஆபீஸ் நிர்வாகங்கள் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் விரும்புகின்றனர்.

Tags:    

Similar News