திருச்சி துவாக்குடி அருகே டிராக்டர் கவிழ்ந்ததில் வாலிபர் உயிரிழப்பு
திருச்சி துவாக்குடி அருகே மின் கம்பங்கள் ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்ததில் வாலிபர் உயிரிழந்தார்.;
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசூர் ஊராட்சியில் மின்கம்பங்கள் நடும் பணி நடந்து வருகிறது. தேசிய தொழில்நுட்ப கழகம் அருகே உள்ள மின் பொறியாளர் அலுவலகத்திற்கு அசூர் ஊராட்சியில் இருந்து தேனீர்பட்டியை சேர்ந்த பழனிவேலின் மகன் கேசவன் (வயது 23), புண்ணிய மூர்த்தியின் மகன் ராமச்சந்திரன் (26), மற்றும் ரெங்கராஜின் மகன் கதிர்வேல் (38) ஆகியோர் 6 மின்கம்பங்கள் ஏற்றுவதற்காக ஒரு டிராக்டரில் வந்தனர்.
கேசவன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் டிராக்டரின் முன்புறத்தில் வலதுபுறம் மற்றும் இடது புறமாக அமர்ந்து இருந்தனர். பாலத்தில் ஏறி இறங்கிய போது டிராக்டர் நிலை தடுமாறியதில் கவிழ்ந்தது. இதில் ராமச்சந்திரன் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து டிராக்டரை ஓட்டிவந்த கதிர்வேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கதிர்வேல் அசூர் ஊராட்சியில் வார்டு உறுப்பினராக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.