திருவெறும்பூரில் வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தல் : 4 பேர் கைது
திருவெறும்பூரில் வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;
பாண்டிச்சேரியிலிருந்து திருச்சி நோக்கி வரும் கார் ஒன்றில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் திருவெறும்பூர் டிஎஸ்பி சுரேஷ்குமார் மேற்பார்வையில் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் ரத்தினவேல் தலைமையிலான போலீசார் காட்டூர் பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போதுகாட்டூர் கடை வீதியில் சந்தேகத்திற்கிடமான வந்த காரை நிறுத்தி வாகன தணிக்கை செய்த போது காரில் பயணித்தவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
போலீசார் விசாரணை செய்ததில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே காட்டூர் வின் நகரை சேர்ந்த மதன்ராஜ், அண்ணா நகரை சேர்ந்த விக்கி, காட்டூர் ராஜவீதியை சேர்ந்த சுகன், எழில் நகரை சேர்ந்த அருண்குமார் ஆகிய நான்கு பேரும் பாண்டிசேரியிலிருந்து சுமார் 450 மது பாட்டில்கள் காரில் கடத்தி கடத்தி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்துதிருவரம்பூர் போலீசார் மதன்ராஜ், விக்கி, சுகன், அருண்குமார் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 450 மது பாட்டில்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.