திருச்சியில் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த மகனை கொலை செய்த தந்தை
திருச்சியில் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.;
திருச்சி செந்தண்ணீர்புரம் வ.உ.சி.தெருவை சேர்ந்தவர் அற்புதராஜ். இவருடைய மகன் அப்பு என்கிற வில்சன் ஆண்ட்ரூஸ் (வயது 33). திருமணமான இவர், மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். வில்சன் ஆண்ட்ரூஸ் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி பலரிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை அவர் மதுபோதையில் வீட்டிற்கு வந்து தந்தை அற்புதராஜிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அற்புதராஜ் வீட்டில் தனி அறையில் போதையில் படுத்து இருந்த வில்சன் ஆண்ட்ரூஸின் கைகள் மற்றும் கால்களை நைலான் கயிற்றால் இறுக்கி கட்டினார். பின்னர் மப்ளர் துண்டால் வில்சன் ஆண்ட்ரூஸ் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயன்றார்.
ஆனால் அவர் இறக்காததால் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து அவரது கழுத்தில் பலமுறை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் வில்சன் ஆண்ட்ரூஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி அருகில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட வில்சன் ஆண்ட்ரூஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து அற்புதராஜை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.