ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு
திருச்சி அருகே நவல்பட்டில், புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் திறந்து வைத்தார்.;
திருச்சி திருவெறும்பூரை அடுத்த நவல்பட்டு சிலோன் காலனியில், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனை, உணவு பதப்படுத்துதல், தொழிற்சாலைகள் மற்றும் நீர் ஆதாரத்துறையின் மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் திறந்து வைத்தார். அத்துடன், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் சமூக சுகாதார வளாகத்தையும் திறந்து வைத்து, அவர் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம், மத்திய இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் கூறியதாவது: ஜல் ஜீவன் திட்டத்திற்கு ரூ.50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. அதிக பயன்பாட்டை கொண்டுள்ள மாநிலம், அதிக பணத்தை பயன்படுத்தி கொள்ளலாம். 40 சதவீதம் மாநில பங்கும் 60 சதவீதம் மத்திய அரசின் பங்கும் ஜல் ஜீவன் திட்டத்தில் அடங்கும்.
ஜல் ஜீவன் திட்டத்தில், மாநில அரசின் செயல்பாடு கொஞ்சம் மந்தமாக உள்ளது.இதனை துரிதப்படுத்த வேண்டும். நீர் பரிசோதனை செய்வதற்கு மாநிலத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே ஆய்வகம் உள்ளது. இந்த பணி தொய்வுக்கு காரணம், ஒவ்வொரு முறையும் பரிசோதனைக்கு ஆய்வகத்திற்கு அனுப்பும் பட்சத்தில் காலதாமதம் ஆகிறது. எல்லா மாவட்டத்திலும் உள்ள நீர் ஆய்வகத்தை மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.